Saturday, October 28, 2017

அன்புடன் வணக்கம்

அன்பு நண்பர்களுக்கு,
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதிவு.

இடை பட்ட இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள். பல அனுபவங்கள். பல புதிய உறவுகள். பல இழப்புகள். பல மகிழ்ச்சியான தருணங்கள். பல துயரங்கள்.

மாணவனாக இந்த உலகத்தில் எந்தொரு பெரிய அனுபவமும் இல்லாமல், கடமைகள் இல்லாமல் சுதந்திரமாக திரிந்த பொது இருந்த நிறைய விடயங்கள் இப்போது இல்லை.

வேலைக்கு செல்லவேண்டும். சம்பாதிக்க வேண்டும். ஒரு மகனாக தாய்க்கு செய்யவேண்டிய கடமைகள். ஒரு கணவனாக மனைவிக்கு செய்யவேண்டியவை. தந்தையாக மகனுக்கு செய்யவேண்டிய கடமைகள். அவர்களின் எதிர் காலத்திற்கு, நம் எதிர்காலத்திற்கு என நாம் சேமிக்க வேண்டியவை என நம் கடமைகளின் எண்ணிக்கை முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருக்கிறது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கால கட்டத்தில் கடந்து செல்லவேண்டிய பாதை.


 கயல் படத்தில் ஒரு காட்சி வரும். மனித வாழ்க்கை பறவைகளை போல இருக்க வேண்டும் என. கேட்டு ரசிப்பதற்கு வேண்டுமானால் அது நன்றாக இருக்கும், ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு நிச்சியமாக அது சரிபட்டு வரும் என தோன்றவில்லை. தேவைகளை குறைக்க வேண்டும் என நினைத்தாலும் அது நடக்காது. நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் அது நீண்டு கொண்டே இருக்கிறது.

வாழ்கைக்கு பணம் முக்கியமில்லை என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை, பணம் மட்டும் முக்கியமில்லை என்று சொல்லலாமே தவிர பணமும் நிச்சயமாக முக்கியமான இன்றியமையாத ஒன்று. அது இல்லாமல் வாழ்கையில் எந்த ஒரு நிகழ்வும் நடப்பதில்லை. எதோ ஒரு வடிவில் பணம் நிச்சயமாக  நமக்கு தேவை. அதை நோக்கி தான் பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது.

கிட்ட தட்ட வாழ்க்கை இயந்திரமாக மாறிவிட்டது. காலையில் எழுந்து தயாராகி, வேலைக்கு சென்று, அன்றாட வேலைகளை பார்த்துவிட்டு, வேலையை முடித்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தூங்குவது என வாழ்க்கை ஒரு அட்டவணை வாழ்க்கையாகிவிட்டது

இந்த இயந்திர வாழ்கையில் இருந்து ஒரு சிறு மாற்றத்திற்காக தான் இந்த பதிவு.மீண்டும் தொடர்ந்து எழுதும் முயற்சியின் ஒரு தொடக்கம் இது    
அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

No comments:

Post a Comment

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி